ராஜபாளையம், ஜூன் 3: ராஜபாளையம் பிஏசி ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரியில் 75வது தமிழ்நாடு மாநில திறந்தநிலை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியது. இந்த போட்டிகளை விருதுநகர் மாவட்ட செஸ் கழக தலைவர் கோபால்சாமி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன், ராம்கோ கல்வி நிறுவனங்களின் அலுவலர் கிரிதரன், பாலிடெக்னிக் பொறுப்பு முதல்வர் கார்த்திகேயன், சர்வதேச நடுவர் அனந்தராமன், நடுவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டியில் தமிழ்நாடு அளவிலான 216 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அனைத்து வயதினரும் போட்டிகளில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு செய்யப்படும் முதல் 4 பேர் தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாடுவதற்கு தகுதி படைத்தவர் ஆவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.