திண்டுக்கல், மே 30: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் காஸ்மாஸ் லயன் சங்கம் இணைந்து நடத்தும் 2ம் ஆண்டு மாநில அளவிலான மேரி மாதா ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 3 நாட்களாக மேட்டுப்பட்டி பாஸ்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டியில் திண்டுக்கல் சேவியோ அணி, மதுரை சேது அணியை 2.0 என்ற கோல் கணக்கில் வென்று முதல் பரிசை தட்டி சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், முதலிடம் பிடித்த திண்டுக்கல் சேவியோ அணிக்கு கோப்பை மற்றும் ரூ.30 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த மதுரை சேது அணிக்கு கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த திண்டுக்கல் கேஎப்சி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதல் பரிசு திண்டுக்கல் கே.பி. அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7000, இரண்டாம் இடம் பிடித்த சென்னை ஸ்கை ப்ளூ அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5000, மூன்றாம் இடம் பிடித்த திண்டுக்கல் மேரி மாதா அணிக்கு கோப்பை மற்றும் ரூ.3000 பரிசுகளை துணை மேயர் ராஜப்பா, காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புரவலர் திபூர்சியஸ், திருவருட்பேரவை பொருளாளர் காஜா மைதீன், 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ், மேரி மாதா கால்பந்து கழக நிறுவனர் ஹெப்சிபா ஆண்டனிராஜ், பங்குத்தந்தை செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.