ஜெயங்கொண்டம், மே 29: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) மல்பெரி சாகுபடி மற்றும் பட்டு உற்பத்தி குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி திருச்சி மணிகண்டத்தில் அமைந்துள்ள பட்டு விவசாயிகள் பயிற்சி மையத்தில் உதவி இயக்குநர் ரெங்கபாப்பா முன்னிலையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சி மையத்தின் உதவி பட்டு ஆய்வாளர்கள் அமுதா மற்றும் சிலம்பரசன் ஆகியோர் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர். மல்பெரி ரகங்கள், நாற்றங்கால் அமைத்தல் மற்றும் பராமரிப்பு முறைகள், நடவு, நிலம் தயார் செய்தல், மல்பெரி நடவு, நீர் நிர்வாகம், களை நிர்வாகம், பட்டுப்புழுக்களுக்கு உணவளிக்க மல்பெரி இலைகள் அறுவடை செய்தல் ஆகிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
மேலும் கொட்டகை அமைத்தல் மற்றும் தூய்மையாகப் பராமரிக்கும் முறை, பட்டுப்புழு வளர்ப்பு முறைகள், பட்டுப்புழுக்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், தீவனம் அளிக்கும் முறை, தரமான பட்டுக்கூடுகள் உற்பத்தி, விற்பனை வாய்ப்புகள், பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள அரசு வழங்கும் மானிய விபரங்கள் குறித்தும் விளக்கினர். நாகமங்கலம் கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் விவசாயி பழனிவேல் அவர்களின் மல்பெரி சாகுபடித் திடல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையைப் பார்வையிட்டு பட்டுக்கூடு உற்பத்தி குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர்கள் மணிகண்டன், ஜோதி, வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ், மகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.