தஞ்சாவூர், செப். 22: மாநில அளவில் உற்பத்தி பொருள் கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இன்றைக்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 7ம்தேதி முதல் 20ம்தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப்பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஒலை பொருட்கள் போன்ற பொருட்களும் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் காட்சி மற்றும் விற்பனை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சி பங்கேற்க விருப்பினால் இன்று 22ம்தேதிக்குள் https:/exhibition.mathibazaar.com/login < http://exhibition.mathibazaar.com/login > என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.