பெ.நா.பாளையம், ஜூன் 3: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த டெக்ஸ்மோ கோப்பைக்கான 54வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. துடியலூரில் உள்ள அக்வா பம்ப் குரூப் நிறுவனங்களின் நிறுவனர் ஆர்.ராமசாமி நினைவாக நாக் அவுட் முறையில் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் உள்ள வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் வாலிபால் போட்டி நடைபெற்று வந்தது.
போட்டிகளின் இறுதி நாளான நேற்று முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை, அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில், 3-0 என்ற செட் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்று முதல் பரிசு மற்றும் டெக்ஸ்மோ கோப்பையை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் அக்வா பம்ப் குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஆர்.குமாரவேலு, இணை நிர்வாக இயக்குநர் தாரா குமாரவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முதலிடம் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு பரிசாக ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் டெக்ஸ்மோ கோப்பையை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, இரண்டாமிடம் பிடித்த இந்தியன் வங்கிக்கு ரூ.50 ரொக்கம், மூன்றாமிடம் பிடித்த கஸ்டம்ஸ் அணிக்கு ரூ.45 ஆயிரம் ரொக்கம், நான்காமிடம் பிடித்த அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம், ஐந்தாமிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிக்கு ரூ.35 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.விழாவில், கோவை மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.