காரைக்குடி, மே 21: மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் காரைக்குடியை சேர்ந்த சிறப்பு மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். சேலத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான ரோடு சைக்கிளிங் போட்டி நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நந்தா 5 கிலோ மீட்டர் சைக்கிளிங் போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் வென்றுள்ளார். முத்துகருப்பையா 2 கிலோ மீட்டருக்கான போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். இதேபோல் அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தில் படிக்கும் சந்தோஷ் ஒரு கிலோ மீட்டருக்கான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மூன்று பேரும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் நாகராஜன், பெற்றோர்கள் கோபலாகிருஷ்ணன் உட்பட பலர் பாராட்டினர். பயிற்சியாளர் நாகராஜ் கூறுகையில், பொற்றோர்களின் ஒத்துழைப்பாலேயே இத்தகையை வெற்றி பெற முடிந்துள்ளது. இம்மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் நிச்சயம் தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள். சிறப்பு குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி தங்கம் பெறுவதே எங்களின் லட்சியம். சிறப்பு குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி வைக்க கூடாது. இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட வைப்பதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரலாம். என்றார்.