சென்னை, ஆக.23: மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 6 பணிமனைகளில் கட்டிட பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பேருந்துகளை மாற்றுவதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹111.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்து கழகத்தை உலக தரம் வாய்ந்த பொது போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மற்றும் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு இடையே 2023ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, பொது போக்குவரத்து சேவை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம், பேருந்து இயக்கத்தில் முக்கிய செயல்திறன் குறியீடுகளை உறுதி செய்து, அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாச தொகையை வழங்கும். முதற்கட்டமாக, 500 மின்சார பேருந்துகளுடன், மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கப்படவுள்ளது. இப்பேருந்துகள் பெரம்பூர்-II, தண்டையார்பேட்டை-I, வியாசர்பாடி, பூந்தமல்லி, கலைஞர் நகர்-I மற்றும் பெரும்பாக்கம்-I ஆகிய 6 பணிமனைகள் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி பணிமனைகளில் இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகளை கலைஞர் நகர்-II, பெரும்பாக்கம்-II, குரோம்பேட்டை-III மற்றும் செம்மஞ்சேரி ஆகிய புதிதாக உருவாக்கப்படவுள்ள 4 பணிமனைகள் மற்றும் தற்பொழுது இயங்கி வரும் தண்டையார்பேட்டை-II பணிமனைகளில் மாற்றுவதற்கு தகுந்த உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, 500 மின்சாரப் பேருந்துகள் சிறந்த முறையில் இயக்கப்படும்.
மேலும், மின்சாரப் பேருந்துகளை இயக்குவதால் எரிபொருள் செலவு குறைவதுடன், காற்று மாசுபாடு குறையும். இப்புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள 6 பணிமனைகளில் கட்டிடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் மற்றும் டீசல் பேருந்துகளை மாற்றப்படவுள்ள 5 பணிமனைகளில் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் ₹111.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.