திருவள்ளூர், ஜூலை 31: மாநகரை விரிவாக்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள 30 கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் வகையில், கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதி காரணமாக சென்னை மாநகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக எல்லையானது 1,189 சதுர கி.மீ அளவில் இருந்து விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியானது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகரத்தை 1,189 சதுர கி.மீட்டரில் இருந்து, 5,904 சதுர கி.மீட்டர் விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு துணை நகரத்துக்கான எல்லைகள், அதில் இடம்பெறும் பகுதிகளுக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
4 நகரங்கள், 12 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் 1,125 கிராமங்களை சென்னை பெருநகர் பகுதிகளில் இணைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், மீஞ்சூர் துணை நகரத்தில் இணைக்கப்பட உள்ள பகுதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் துணை நகரம், 62.78 சதுர கி.மீட்டரில் அமைகிறது. திருவள்ளூர் துணை நகரம், 37.74 சதுர கி.மீட்டரில் அமைகிறது. இதேபோல் மீஞ்சூர் துணை நகரம் 111.62 சதுர கி.மீட்டர் பரப்பில் அமைகிறது. ஒவ்வொரு துணை நகரத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க சி.எம்.டி.ஏ முக்கிய துறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், தெற்கிலிருந்து நகரத்தின் நுழைவாயிலாகும். மேலும் பெரும்பாலான கிராமங்கள் பெருகிவரும் மக்கள் தொகையுடன் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை வளர்ச்சியின் விளைவாக தெற்கு புறநகர் பகுதிகளில் சுகாதாரம், குடிநீர் மற்றும் முறையான திடக்கழிவு மேலாண்மைக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், கிராமங்களை மேம்படுத்த போதிய நிதி ஆதாரம் இல்லாத தனி கிராம ஊராட்சிகள் மூலம் நிர்வகிக்கப்படுவதால், முறையான வடிகால், குடிநீர், சாலை, தெருவிளக்கு மற்றும் இதர வசதிகளை பெற கிராமங்களை சென்னையுடன் இணைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலுடன் நகரம் வேகமாக விரிவடைந்து வருவதால், மறைமலைநகர் தொழில் நகரம், மஹிந்திரா சிட்டி, கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், சிறுசேரி தொழில் பூங்கா போன்ற சில கிராமங்களை சென்னை நகரத்துடன் சேர்க்க சிஎம்டிஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வில்லியம்பாக்கம், வெங்கடாபுரம், வீராபுரம், வல்லம், சிங்கப்பெருமாள் கோவில், புலிப்பாக்கம், ஒழலூர், மேலமையூர், கருநிலம், செட்டிபுண்ணியம், திருவடிசூலம், தென்மேல்பாக்கம், பெரியபொத்தேரி, பட்டரைவாக்கம், குன்னவாக்கம், கொண்டமங்கலம், அஞ்சூர், அனுமந்தபுரம், ஆலப்பாக்கம், ஆத்தூர் மற்றும் காட்டாங்கொளத்தூர், திருக்கழுகுன்றம், நெம்மேலி, புல்லேரி, மோசிவாக்கம், திருமணி, அழகுசமுத்திரம், மேலேரிப்பாக்கம் , பொன்விளந்தகளத்தூர், திருப்போரூர் ஆகிய 30 கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட உள்ளன.
இதற்காக கிராம பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, மேற்கண்ட 30 கிராமங்களை சென்னையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘டெல்லி, மும்பை போன்ற மற்ற மாநகரங்கள் போல் சென்னை மாநகரத்திற்கும் துணை நகரங்கள் நிச்சயம் தேவைப்படுகின்றன.
அதன் அடிப்படையிலேயே தான், சிஎம்டிஏ தனது எல்லையை விரிவாக்கம் செய்கிறது. அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஒரு மாநகரமாக தற்போது சென்னை இருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து பெரும்பான்மை மக்கள் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் தொகை அடர்த்தி, குடியிருப்புக்கான வசதி, குடி தண்ணீருக்கான வசதி, சுகாதாரமான காற்றோட்டம், சுகாதாரமான சுற்றுச்சூழல் இதனடிப்படையில்தான் சென்னையின் எல்லையை விரிவுபடுத்த சிஎம்டிஏ முயல்கிறது.
அடுத்த தலைமுறையினருக்கு இட வசதி ஏற்படுத்தி மக்கள் அடர்த்தி நெருக்கடியை குறைத்து சுகாதாரமான காற்று, குடிதண்ணீர், நகர கட்டமைப்பு, முறையாக கழிவுநீர் வெளியேற்றம், குப்பை கொட்டும் தளம், படகு போக்குவரத்து, சாலைகள் அபிவிருத்தி திட்டம் போன்றவற்றைக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எடுத்து இருக்கக்கூடிய மிக நீண்டகால எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதிதான் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சென்னை வளர்ச்சி குழுமத்தின் எல்லைக்குள் கொண்டு வருகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் பயன்பெறுவர்,’’ என்றனர்.