கோவை, மே 19: கோவை மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இரவு நேரத்தில் மாநகரின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று மதியம் துடியலூர், கவுண்டம்பாளையம், சின்ன தடாகம், தொண்டாமுத்தூர், கணபதி, உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழந்தது. பின்னர் பலத்த மழை பெய்ய துவங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குறிப்பாக, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி, வடகோவை, சிந்தாமணி, வடகோவை மேம்பாலம், அவினாசி மேம்பாலம் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டவுன்ஹால், பெரியகடைவீதி, உக்கடம், அவினாசி மேம்பாலம், நஞ்சப்பா ரோடு, கூட்செட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் மெதுவாக சென்றன. போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். கனமழைக்கு பின் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாநகரில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது.