திருப்பூர், மே 30: தமிழகம் முழுவதும் அனைத்து பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் துறை சார்பாக கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அகற்றாத கொடி கம்பங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து அகற்றப்படாத கொடிக்கம்பங்களை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் கட்சி மற்றும் அமைப்புகளின் கொடி கம்பங்கள் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் ஊழியர்கள் அகற்றி அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொடிக்கம்பங்கள் விரைவில் முழுவதுமாக அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் அதுவரையில் கட்சி கொடி கம்பங்களை அகற்றக் கூடாது என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டி இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த உள்ளாட்சிகளில் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.