கோவை: கோவை மாநகராட்சியில் மைதானம், பூங்கா, ரிசர்வ் சைட், காலியிடம், நடைபாதை போன்றவற்றை தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அபகரிப்பது அதிகமாகிவிட்டது. கடந்த 3 ஆண்டில் மாநகராட்சியின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிப்பில் இருந்து மீட்கப்பட்டது. காலியிடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைப்பதும், கம்பி வேலை அமைப்பதும் அவ்வப்போது நடக்கிறது. சிலர் செல்வாக்குடன் மாநகராட்சி இடங்களை அபகரித்து சொந்த பயன்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி இடங்களில் மீட்காமல் மண்டல அலுவலக அதிகாரிகள், நகரமைப்பு பிரிவினர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாக தெரிகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி கடந்த சில மாதங்களாக வேகமாக நடக்கவில்லை. சில இடங்களில் மாநகராட்சி இடத்திற்கான அறிவிப்பு பலகையும் மாயமாகி விட்டது. மைதானம், பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கடைகள், நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது.
அனுமதியின்றி மாநகராட்சி இடத்தில் வணிக கடைகள் செயல்படுவதும் அதிகமாகிவிட்டது. மாநகராட்சி இடங்களை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது. வார்டு வாரியாக குழு அமைத்து மாநகராட்சி ரிசர்வ் சைட் மீட்க வேண்டும். பொதுமக்கள், குடியிருப்பு சங்கத்தினர் மூலமாக மாநகராட்சி இடங்களை பாதுகாப்பாக வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.