கோவை, நவ. 18: கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா லோகு தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் செந்தில்குமரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், மத்திய மண்டலம் முழுவதும் 20 வார்டுகளில் தார்ச்சாலைகள் சிதிலமடைந்து கிடக்கிறது, இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், ‘‘பாதாள சாக்கடை பணி, சூயஸ் குடிநீர் திட்டப்பணி ஆகிய இரு பணிகள் எந்தெந்த பகுதிகளில் நிறைவுபெற்றுள்ளதோ, அதந்தந்த பகுதிகளில் தார்ச்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள சில இடங்களில் அத்தியாவசிய தேவை கருதி, உடனடியாக தார்ச்சாலைகளை சீரமைக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், நிதிக்குழு தலைவர் முபசீரா, கவுன்சிலர்கள் வைரமுருகன், பார்த்தீபன், பிரதீபா ரவீந்திரன், ரேவதி, ஜெயப்பிரதா, கமலாவதி போஸ், முனியம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.