கோவை, ஆக. 29: கோவை மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா லோகு தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பேசிய பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றச்சாட்டு சுமத்தினர்.
வார்டுக்குள் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை என ஒவ்வொரு துறை அதிகாரிகள் பெயரையும் குறிப்பிட்டு கடுமையாக குற்றம்சுத்தினர்.
* 63வது வார்டு கவுன்சிலரும், பணிக்குழு தலைவருமான சாந்தி முருகன் பேசுகையில்,“எனது வார்டில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பை அகற்றாமல் மலைபோல் தேங்கி கிடக்கிறது. எந்த புகார் சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களிடம் ேநரடியாக பதில் சொல்வது வார்டு கவுன்சிலர்கள்தான். மக்கள் எங்களுக்கு அன்றாடம் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் தப்பித்து விடுகிறார்கள். அதிகாரிகளின் இந்த போக்கு, திமுக ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இனி, கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்து நடைபெற உள்ள மண்டல கூட்டத்தை புறக்கணிப்போம்’’ என்றார்.
* 82வது வார்டு கவுன்சிலரும், நிதிக்குழு தலைவருமான முபசீரா பேசுகையில்,“எனது வார்டிலும் பாதாள சாக்கடை குழாயில் அதிகளவில் அடைப்பு உள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கட்டிடங்களுக்கு புதிதாக வரி போடுவது, வரி புத்தகம் பெயர் மாற்றம் செய்வது போன்ற விண்ணப்பம் கொடுத்தால், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை. உதவி கமிஷனரிடம் கேட்டால், அவரும் முறையாக பதில் அளிப்பதில்லை. வேண்டுமென்றே ஏதாவது குறை கண்டுபிடித்து பென்டிங் போடுகிறார்கள். அதேநேரம், புரோக்கர்கள் யாராவது இதுபோன்ற விண்ணப்பம் கொடுத்தால் அடுத்த வாரமே பணி நடந்து விடுகிறது. இது எப்படி? அப்படியென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது?’’ என்றார்.
* 49-வது வார்டு கவுன்சிலர் அன்னக்கொடி பேசுகையில்,“எனது வார்டில் குப்பை அகற்றாமல் மலைபோல் தேங்கி கிடக்கிறது. குப்பை அகற்றுவதற்கு 21 தள்ளுவண்டிகள் கொடுத்தார்கள். ஆனால், தற்போது 5 தள்ளுவண்டி மட்டுமே உள்ளது. மீதமுள்ளவை எங்கே போனது என தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேள்வி கேட்டால் யாரும் பதில் அளிப்பதில்லை. மேலதிகாரிகளிடம் புகார் செய்தால், யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படியே சென்றால், மக்களிடம் யார் பதில் சொல்வது’’ என்றார்.
இவர், இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது எந்த அதிகாரியும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். ஒருசில அதிகாரிகள் சிரித்தனர். இதனால், மனம் உடைந்த கவுன்சிலர் அன்னக்கொடி கண்ணீர் விட்டு அழுதார். அவரை, அருகில் இருந்த நிதிக்குழு தலைவர் சாந்தி முருகன் அமைதிப்படுத்தினார். இதுபோல், கவுன்சிலர்கள் மார்க்கெட் மனோகரன், ரேவதி முரளி, வித்யா ராமநாதன், வைரமுருகன் என பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு சுமத்தினர்.
* 80வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிச்செல்வன் பேசுகையில்,“கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கை அனைத்தும் நியாயமானது. அதே நேரம், நமக்கு நாமே காயப்படுத்த கூடாது. இதுபற்றி அமைச்சர் சு.முத்துசாமி கவனத்துக்கு கொண்டுசென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்துவோம். மக்கள் பணி தொய்வின்றி நடைபெற அனைவரும் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவோம்’’ என்றார். இதே கருத்தை 69வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சரவணகுமார் முன்மொழிந்தார்.
* மண்டல தலைவர் மீனா ேலாகு பேசுகையில்,“எந்த பணியாக இருந்தாலும் அதிகாரிகள்தான் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அரசு அனுமதி அளித்த பின்னர் டெண்டர் விட வேண்டும். அதன்பிறகு அரசு நிதி ஒதுக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் பணி துவங்கும். இது, ஒரு பெரிய பிராசஸ். தனிப்பட்ட மண்டல தலைவர் ஒருவரால் எல்லா பணிகளையும் செய்து முடித்து விடமுடியாது.
கவுன்சிலர்களின் கோரிக்கை மற்றும் மனக்குறையை நான் முழுமையாக அறிவேன். இவை எல்லாவற்றையும் மாநகராட்சி கமிஷனர், அமைச்சர் மற்றும் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, தீர்வு காணப்படும்’’ என்றார்.
முன்னதாக, மாநகரட்சியில் சிறப்பாக பணியாற்றிய உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர், உதவி பொறியாளர்கள் குமரேசன், சரவணகுமார், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோருக்கு மண்டல தலைவர் மீனா லோகு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.