கோவை, அக். 21: கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஒப்பந்த பணியாளர்கள் தங்களை நிரந்த ஊழியர்களாக மாற்ற கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 ஊதிய உயர்வு சம்பளத்தை வழங்க கோரியும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீண்ட நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் டிரைவர், கிளீனர்கள் அனைவருக்குமே எவ்விதமான சம்பளமும் நியமனம் செய்யாத காரணத்தினால் கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் கோவை வஉசி மைதானத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனால், அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளராக உள்ள எங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.