சென்னை, மே16: மாநகராட்சி இணையதள பக்கத்தில் இருந்து ஒருவரது பிறப்பு, இறப்பு சான்றிதழை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்வதை தடுக்கும் வகையிலும், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பதிவிறக்கம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் உரிமை ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான சாட்சியாக உள்ளது. இந்தியாவில் பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு தனிநபரின் பிறப்பை ஆவணப்படுத்தும் முக்கியமான அதிகாரப்பூர்வ பதிவாகும். இதில் நபரின் முழுப் பெயர், அவர்களது பெற்றோர் பெயர்கள், பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பாலினம் போன்ற முக்கியமான விவரங்கள் உள்ளன.
சென்னையில் பிறந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறலாம். அதன்படி, மாநகராட்சி இணையளத்தில் தேதி மற்றும் பாலின விவரங்களை கொடுத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய ஒரு இணையதளம் உள்ளது. https://chennaicorporation.gov.in/Tamil/online-civic-services/birthCertificate.do?do=show என்ற இணையதளத்தில் பதிவு எண், குழந்தையின் பெயர், பாலினம், பிறந்ததேதி, குழந்தை பிறந்த இடம், தந்தையின் பெயர், தாயின் பெயர் போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்து டவுன்லோடு செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற தேதி மற்றும் பாலின விவரங்களை கொடுத்து பதிவிறக்கம் செய்யும் நடைமுறை காரணமாக அந்த சான்றிதழ்களுக்கு தொடர்பு இல்லாதவர்களும் பதிவிறக்கம் செய்யும் நிலை இருந்தது. இது சான்றிதழ்தாரர்களின் தகவல்களுக்கும், தனியுரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் நடைமுறையில் மாநகராட்சி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்பவர்கள் தங்கள் பெயர், செல்போன் எண் மற்றும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவரங்களை பதிவு செய்த பின்னர், செல்போன் எண்ணுக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் ஒடிபி உபயோகித்து இணையதள பக்கத்தின் உள்ளே பயனர்கள் நுழைய முடியும். இதை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும் பிறந்த தேதி, பாலினம், ‘கேப்ட்சா’ குறியீடுகளை கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண்டும். இதன்பிறகே பிறந்த நாள் மற்றும் பாலினம் தொடர்புடைய சான்றிதழ்கள் இணையதள பக்கத்தில் காண்பிக்கும். அதில் இருந்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பயனர்கள் பதிவிறக்கம் செய்ய இயலும். இதனால் யார் யார் நமது பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்தார்கள் என்பதை பார்க்க முடியும்.