நாமக்கல், ஆக.14: நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும், வரி விதிப்பு அதிகரிக்காது என ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். நாமக்கல் நகராட்சி கடந்த மார்ச் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாமக்கல் நகரையொட்டி உள்ள 12 ஊராட்சிகள், இணைக்கப்பட்டு நாமக்கல் மாநகராட்சியாக நேற்று முதல் செயல்பட துவங்கியது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணைமேயர் பூபதி ஆகியோரிடம் வழங்கினார். இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பியை நேற்று மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதைத்தொடர்ந்து ராஜேஸ்குமார் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அரசானையை அரசிதழில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். மாநகராட்சியுடன், நாமக்கல், எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியங்களில் இருந்து வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாய்க்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரம் என்பது மாவட்ட தலைநகராக இருக்கிறது. கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தி, முட்டை ஏற்றுமதி, லாரித்தொழில் போன்றவை இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது.
நாமக்கல் நகரை சுற்றி பல்வேறு குடியிருப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் நகராமாக நாமக்கல் மாறி வருகிறது. பல்வேறு தொழில் நகரமாக நாமக்கல் இருப்பதால், அடிப்படை வசதிகளான சாலைவசதி, குடிநீர் வசதியை அதிகரிக்கும் வகையில் நாமக்கல் நகரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் அதிகமான நிதி உதவி அதிகம் கிடைக்கும். மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும். அரசாங்கத்திடம் இருந்து அதிக மானியம் கிடைக்கும். பாதாள சாக்கடை றிறைவேற்றமுடியும். ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை வசதி செய்து கொடுக்கப்படும்.
புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உலகளவில் புகழ் பெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் மாநகராட்சியாக நாமக்கல் மாறியுள்ளதால் பல்வேறு வசதிகள் வருங்காலங்களில் பெருகும். நாமக்கல் நகரின் வளர்ச்சிக்காக ₹190 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் 4 கட்டமாக நடக்கிறது. சேலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை மற்றும் பரமத்தி சாலைகள் இந்த புறவழிச்சாலை திட்டம் மூலம் இணைக்கப்படுகிறது.
நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியும் சேர்த்து புதிய வார்டுகள் உருவாக்கப்படும். ஒரு மாநகராட்சி என்றால் குறைந்தபட்சம் 50 வார்டுகள் வரை இருக்கும். நாமக்கல் நகராட்சியாக இருக்கும்போது என்ன வரிவிதிப்பு இருந்ததோ அதே வரி விதிப்பு தான் வருங்காலங்களிலும் இருக்கும். இரண்டு ஆண்டுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கரூரிலும் வரி விதிப்பு அதிகரிக்கப்படவில்லை. நாமக்கல் நகரை சுற்றியுள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியை உயர்த்தி ஆணையிட்டுள்ளனர். இதற்கு நாமக்கல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். மேயர், துணை மேயர் பதவி ஏற்பு விழாக்கள் பின்னர் நடைபெறும்.
இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். அப்போது, திமுக நகர செயலாளர்கள் ராணா.ஆனந்த், சிவக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.