சிவகாசி, ஜூலை 22: சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி விதிகளின் படி போஸ்டர்கள் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் சமீபத்தில் போஸ்டர் ஒட்டிய எட்டு நிறுவனங்கள் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
எனவே மாநகராட்சி பகுதிகளில் சுவரொட்டிகள் எதுவும் ஒட்டக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் தெரிவிக்கையில், மாநகராட்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுமை மாநகராக சிவகாசி மாநகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள பூங்காக்கள், சாலையோர மரங்களில் பசுமையை பாதுகாத்திடும் வகையில் பச்சை மஞ்சல் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டினால் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.