*பன்னாட்டு எரிசக்தி வளர்ச்சி நிறுவன தலைவர் தகவல்
தொண்டாமுத்தூர் : ஒன்றிய அரசின் சமூக நிதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தூய்மை பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்களுக்காக 5 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக கோவை நேர்டு தொண்டு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இது குறித்து பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் நேர்டு தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் பன்னாட்டு எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான காமராஜ் கூறியதாவது:
கோவையில் குப்பைகளிலிருந்து எரிவாயு தயாரிக்க பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் பயனுள்ள குப்பைகளை காசாக்கும் திட்டத்தை மிகவும் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி செயல் படுத்த முடியும்.
வாய்ப்பு வசதி உள்ளவர்கள் ரூ.30 ஆயிரம் செலவில் தங்கள் வீடுகளிலேயே குப்பைகளை தங்கள் வீட்டுக்கு தேவைப்படும் சமையல் எரிவாயு தேவையில் பாதி அளவை பூர்த்தி அடைய முடியும். இதனால் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தும் சமையல் காஸ் சிலிண்டரை 2 மாதம் வரை பயன்படுத்த முடியும்.மாநகராட்சியில் தினசரி உற்பத்தியாகும் சுமார் 1000 டன் குப்பைகளிருந்து தினசரி 10 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தியாகும் தினசரி 2,40,000 யூனிட் மின்சாரம் மூலம் தினசரி வருவாய் ரூ.10 லட்சமாக விளங்கும்.தற்போது கழிவு நீரை சுத்திகரிக்கும் கலன்களால் தினசரி லட்சக்கணக்கான செலவில் மின்சாரத்தை கோவை மாநகராட்சி பயன்படுத்த வேண்டியுள்ளது.
தூய்மை பணியாளர்களால் செயல்படுத்தப்படவுள்ள கழிவு எரிவாயு தொழில் நுட்ப திட்டத்தின் மூலம் மின்சார செலவு மிச்சப்படுத்தப்படுவதோடு கூடுதலான மின் உற்பத்தியான அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும். அதன்மூலம் கிடைக்கும் சேமிப்பை மாநகராட்சியின் பொதுமக்களுக்கு பயனுள்ள மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய அமைச்சரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும் 50 சதவீதம் வரை, பாதி திட்டச் செலவை மானியமாக கொடுக்க முன் வந்துள்ளது. மீதி பணத்திற்கு தேசிய தூய்மை பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆண்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டியிலும் பெண் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டியிலும் கடன் வழங்கி அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வழிசெய்து கொடுக்கிறது.
பயிற்சியை எடுக்கும் தூய்மை பணியாளர்களுக்கு செப்டிக் டேங்க் வண்டி வழங்குவதற்கும் சாலை கூட்டும் இயந்திர வண்டிகள் மற்றும் குப்பை அள்ளும் இயந்திரங்கள் வாங்குவதற்கும் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கோவை மாநகராட்சியின் ஆனையாளரின் முயற்சியில் 500 தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்ட பயிற்சியில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற உள்ளார்கள். அவர்களுக்கு பயிற்சியின் கடைசி நாளில் மத்திய அரசின் பசுமை வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் அவர்களை மதிப்பீடு செய்து சான்றிதழ்களை வழங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.