Thursday, December 7, 2023
Home » மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் ஒரே நாள் இரவில் சாலைகள் அமைப்பு: பருவ மழைக்குள் முடிக்க திட்டம்

மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் ஒரே நாள் இரவில் சாலைகள் அமைப்பு: பருவ மழைக்குள் முடிக்க திட்டம்

by Karthik Yash

சென்னை, அக்.6: சென்னையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில், வரும் 10ம் தேதிக்குள் சுமார் 500 சாலைகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மணப்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், போரூர், மடிப்பாக்கம் போன்ற கூடுதல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல், இரவில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் எங்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலை அமைக்கப்பட்ட தெருவின் பெயர், ஒப்பந்ததாரர் பெயர், சாலையின் வகை, பொறியாளர் யார் என அனைத்து விவரங்களையும் மாநகராட்சி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் சென்னையில் எங்கெல்லாம் சாலை அமைக்கப்படுகிறது என்பதை எளிதாக மக்களால் அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக, பாதாள சாக்கடை, வடிகால் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் விறுவிறுப்பாக அமைக்கப்படுகின்றன.

அதன்படி, மண்டலம் 6ல் உள்ள பேசின் பவர் ஹவுஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, மண்டலம் 13ல் உள்ள சர்தார் பட்டேல் சாலை, மண்டலம் 11ல் உள்ள ஸ்ரீதேவி குப்பம் மெயின்சாலை, மண்டலம் 13ல் உள்ள கல்கி குப்பம் சாலை (திருவான்மியூர் சிக்னல் அருகே), மண்டலம் 6ல் உள்ள தேவநாதன் சாலை, மண்டலம் 13ல் உள்ள பெசன்ட் அவின்யூ (அவ்வை இல்லம் அருகே), மண்டலம் 4ல் உள்ள எத்திராஜ் சாமி சாலை (எதிராஜ் காலேஜ்), மண்டலம் 8ல் உள்ள நியூ ஆவடி சாலை (பச்சையப்பா கல்லூரி எதிரே) என 9 இடங்களில் நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் சாலை அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் பல இடங்களில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. சாலை சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த 9 சாலைகள் அமைக்கப்பட்ட இடம், பொறியாளர் பெயர், சாலை அமைத்த ஒப்பந்ததாரர் பெயர் போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் உங்கள் பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாக அறிய முடியும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘செப்டம்பர் 20ம் தேதி முதல் ஏற்கனவே 100 சாலைகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இரவில் மழை பெய்து வருவதால், சில இடங்களில் பகலிலும் சாலை பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலைகளை சீரமைப்பதற்கு முன்பாக சாலையோரம் நிற்கும் கைவிடப்பட்ட வாகனங்களையும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் காவல்துறையின் உதவியுடன் அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக இந்த சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிவடைந்து விடும்,’’ என்றனர்.

ஆன்லைனில் தெரிவிக்கலாம்
உங்கள் பகுதி சாலைகள் மோசமாக இருப்பதை புகைப்படத்துடன் எடுத்து சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் டேக் செய்து புகார் அளித்தால், அந்த மண்டல அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்று, குறிப்பிட்ட சாலையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களில் பலருக்கும் சென்னை மாநகராட்சி டிவிட்டரில் பதில் அளித்துள்ளது. அந்த வகையில் உங்கள் குறைகளை சென்னை மாநகராட்சியின் டிவிட்டரில் பதிவிடலாம், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?