விழுப்புரம், நவ. 1: மாணவி மதி மரண வழக்கில் தாய் செல்வி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்-2 படித்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூரை சேர்ந்த மாணவி மதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையின் நகல், வழக்கு ஆவணங்கள், கடந்த ஜூன் 12ம் தேதி, மதியின் தாய் செல்வியிடம் கோர்ட் மூலம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் வழங்கும்படி கோர்ட்டில் செல்வி, மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், குற்றப்பத்திரிகையில் விடுபட்ட வழக்கு ஆவணங்கள், பள்ளி வளாக சிசிடிவி வீடியோ பதிவுகள், ஜிப்மர் ஆய்வறிக்கை நகல்களை கேட்டு, கடந்த 17ம் தேதி செல்வி புதிய மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே தொடர்ந்து தாய் செல்வி மீண்டும் இந்த ஆவணங்களை ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில், இதற்கு சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நேற்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீசார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டனர். தொடர்ந்து நீதிபதி கால அவகாசம் வழங்கி வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.