வந்தவாசி, ஆக.27: வந்தவாசி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மேலும், மாலை நேரத்தில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெகன்நாதன் மகன் இளையகுமார்(26) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து மாணவியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை உணர்ந்த மாணவி அலறி கூச்சலிட்டார். உடனே இளையகுமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து மாணவி கூறினார். தொடர்ந்து, நேற்று வந்தவாசி வடக்கு போலீசில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து இளையகுமாரை கைது செய்தார். பின்னர், அவரை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் வாலிபர் சிஷ்மிஷம் செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.