குடியாத்தம், ஆக.26: குடியாத்தம் அரசு பள்ளியில் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெற்றோரிடம் பேசுவதற்காக அறிவியல் ஆசிரியர் ராமன்(45) என்பவரிடம் செல்போனை கேட்டுள்ளார். ஆசிரியரும் செல்போனை கொடுத்துள்ளார். பின்னர், அந்த மாணவி பெற்றோரிடம் பேசிவிட்டு செல்போனை கொடுத்தபோது, ஆசிரியர் ராமன் மாணவியின் கையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்பி மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கனிமொழி ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, முதற்கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் ராமனை தற்காலிகமாக பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் ஆசிரியர் ராமன் திடீரென தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சங்கீத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் ராமன் வகுப்பு நடத்திய மாணவிகளிடம் இந்த பிரச்னை குறித்து கேட்டறிந்தனர். இதில், மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியது தெரியவந்தது. பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் ராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஷாமிலா தலைமையிலான போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.