தஞ்சாவூர், ஜூலை 23: பாடப்புத்தகங்களில் மதவாத கருத்துக்கள் புகுத்தும் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூரில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. என்சிஆர்டி கொண்டு வந்துள்ள புதிய 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இருந்து, பல்வேறு பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. வேதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரிகம் என்பதற்கு பதிலாக சிந்து – சரஸ்வதி நாகரிகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்வி திட்டம் வடிவமைப்பின் படி இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சந்துரு போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் ஹரிஷ், ரஞ்சித், ரமணன், அருள்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.