தா.பழூர், ஆக.27: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் ஆலயத்தில் கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு கார்த்திகை தினத்தை முன்னிட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பின்னர் வில்லேந்திய வேலவர் வண்ணமிகு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதுபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சௌந்திரநாயகி அம்மன் உடனுரை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், கூத்தங்குடி கூத்தாண்டேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை தினத்தை முன்னிட்டு ஸ்வாமி அம்பாள், முருகப்பெருமானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர். திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர் உள்ளிட்ட பல கோவில்களில் சுப்ரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர்,தேன், பஞ்சாமிர்தம், திருநீறு மற்றும் பழ வகைகள் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின் தீப ஆராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்து வணங்கி சென்றனர்.