கோவை, ஜூன் 7: திராவிடர் தமிழர் கட்சி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சிங்காநல்லூரில் மாவட்ட ஆதி திராவிட நலத்துறையின் கீழ் ஆதிதிராவிட மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது. இங்கு புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி ராமநாதபுரம், ஒண்டிப்புதூர், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு பள்ளிகளில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த விடுதி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் அருகில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
பின்னர் இந்த விடுதி கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த விடுதியில் தங்க மாணவர்கள் வந்தனர். அப்போது விடுதி நிர்வாகிகள் இந்த விடுதி மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. உங்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் எங்கு தங்குவது என தெரியாமல் உள்ளனர். இந்த விடுதியில் 13 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வந்த நிலையில், தற்போது தங்க இடம் இன்றி உள்ளனர். எனவே மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.