கிருஷ்ணகிரி, செப்.12: கிருஷ்ணகிரியில், அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 6ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி, காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசாக ₹3 ஆயிரம், 3ம் பரிசாக ₹2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ₹2 ஆயிரம் சிறப்பு பரிசாக வழங்கப்படும். பேச்சுப் போட்டிகளுக்கு மொத்தம் ₹48 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கு, பள்ளி மாணவர்களுக்கு காஞ்சித் தலைவன், அண்ணாவும், பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளுக்கு, பள்ளி மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரம், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் போராளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.