உடுமலை, ஜூலை 6: மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன.கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பங்கு பெற்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில் 8ம் ஆண்டாக மாணவர்களுக்கு மகாத்மா காந்தி உண்டு பள்ளியில் வளாகத்தில் பயிற்சிகள் துவக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பயிற்சியை உடுமலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளி காப்பாளர் புருஷோத்தமன், சமூக ஆர்வலர் சாஸ்தா ரமேஷ், பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் செயலாளரும் சிலம்ப ஆசானுமான வீரமணி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சிலம்ப பயிற்சியாளர் சதீஷ் வாரந்தோறும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.