சாயல்குடி, ஆக.27: கடலாடி அருகே மங்களம் கிராமத்திலுள்ள பூரண தேவி,புஷ்கலா தேவி உடனுரை மங்களஅய்யனார் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நேற்று காலையில் பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடந்தது. இதில் தூத்துக்குடி விஜயகுமார் மாடுகள் முதலிடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம், மேலச்செல்வனூர் வீரக்குடி முருகய்யனாரின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், புதுக்கோட்டை மணியின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
இதனை போன்று சுமார் 3 கிலோமீட்டர் நடந்த சின்ன மாடுகள் பந்தயத்தில் 16 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டது. இதில் ராமநாதபுரம் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதல் இடத்தையும்,தூத்துக்குடி விஜயகுமாரின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், தளவாய்குளம் ராமரின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. முதல் மூன்று இடங்களை பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாடு ஓட்டி மற்றும் சாரதி, உரிமையாளர்களுக்கு பரிசுகள், பரிசு தொகை வழங்கப்பட்டது. இப்போட்டியை கடலாடி சுற்றுவட்டார கிராமமக்கள் கண்டு ரசித்தனர்.