கரூர், செப். 21: கருர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெள்ளை அங்கியை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:
மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுககான வெள்ளை அங்கி வழங்கும் இந்த நாளில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வெள்ளை அங்கி உடுத்தும் பழக்கம் நாங்கள் பயிலும் காலத்தில் இல்லை. தற்போதுதான் வெள்ளை அங்கி அணியப்படுகிறது. வெள்ளை அங்கியை உடுத்துவதால் நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்த வெள்ளை அங்கி உடை உங்களுக்கு பெருமை அளிக்க வேண்டும். நீங்கள் இந்த உடைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
வெள்ளை அங்கி அணிவதன் மூலம் கர்வம் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வெள்ளை அங்கி உடைக்கு கறை படாமல் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் மருத்துவர்களிடம் கடமைகள் மற்றும் நன்னடத்தை அமைக்கும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வர் தாமோதரன், துணை முதல்வர் நளினி, கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அலுவலர் நந்தகுமார் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.