மதுரை, ஜூலை 31: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில், பூ விற்பனை செய்யும் பெண்ணிடமிருந்து, தங்க செயின் மற்றும் பணம் பறித்த பெண், சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டார். மதுரை திடீர்நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் சுல்தான். இவரது மனைவி பானு(40). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று மார்க்கெட்டில் பூ வாங்கிக்கொண்டு, திடீர்நகர் செல்வதற்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து பெரியார் செல்லும் டவுன்பஸ்சில் ஏறினார்.
அப்போது சிறுவனுடன் வந்த ஒரு பெண், பானுவின் கழுத்தில் கிடந்த தங்க செயின் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த பானு கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணையும், சிறுவனையும் விரட்டிப்பிடித்தனர். இதனையடுத்து, இருவரையும் மாட்டுத்தாவணி போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில், இவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்த முனியாண்டி மனைவி நாகவள்ளி(50) மற்றும் இதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, தாலி மற்றும் பணத்தை மீட்டனர்.