வேலூர், ஜூன் 18: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டதால் ரூ.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் நடக்கும் கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், காளைகள், எருமைகள், உழவு மாடுகள், கோழிகள், ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். கடந்த 1 மாதமாக கோடை மழை பெய்த நிலையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்து கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக அதிகளவில் மாடுகள் குவிந்தது. இந்நிலையில், நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் குறைந்த அளவு மாடுகளே விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர். அதிகளவில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1000க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதனால் வெளியூர் வியாபாரிகள் குறைந்தளவு மாடுகளையே வாங்கி சென்றனர். இதில், சுமார் ரூ.50 லட்சத்திற்கு வியாபாரம் நடைபெற்றதாக கால்நடை வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது கோடை காலம் முடிந்து உள்ளது. இன்னும் ஒரிரு மாதங்கள் கழித்து பருவ மழை பெய்ய தொடங்கும் போது மாடுகள் விற்பனைக்கு அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது, வியாபாரத்திற்கு மாடுகளை கொண்டு வந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும் என கால்நடை வியாபாரிகள் தெரிவித்தனர்.