கொடைக்கானல், ஜூலை 9: தமிழக அரசின் தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொடைக்கானல் மலைப்பகுதியில் மாடி தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காகவும், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்காகவும் இந்த மாடித்தோட்ட திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 50 சதவீத மானியத்தில் ஆறு வகையான காய்கறிகளுக்கான விதைகளும், அவற்றிற்கான உயிரி உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா. மற்ற உரங்களான விரிடி, வேப்ப எண்ணெய் மருந்து மற்றும் காய்கறிகள் வளர்ப்பதற்கான கையேடு ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்த மாடித்தோட்ட காய்கறி விதைகளுக்கான மொத்த தொகுப்பிற்கு தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை ரூ.900 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 50 சதவீத மானியத்தில் கொடைக்கானல் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு இந்த மாடி தோட்ட காய்கறி தொகுப்புகள் ரூ.450க்கு வழங்கப்பட உள்ளன. காய்கறி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதாரம் நகல் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய தளம் http://tnhorticulture.tn.gov.in./kit.new என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கொடைக்கானல் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் காயத்ரி தெரிவித்துள்ளார்.