மதுரை, மார்ச் 6: மதுரையின் பழமையான கண்மாய்களில் ஒன்றான மாடக்குளம் கண்மாய் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன், நீர்ப்பிடிப்பு பகுதி 120 ஏக்கராகும். வைகை ஆற்றிலிருந்து நேரடி கால்வாய், நிலையூர் கால்வாய் மற்றும் மழைநீரால் இந்த கண்மாய் நிரம்புகிறது. வைகை ஆற்றிலிருந்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் பகுதி பள்ளமாக மாறியதால், கொடிமங்கலம் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து 12.8 கி.மீ நீளத்திற்கு மாடக்குளம் கால்வாய் தூர்வாரப்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதற்கிடையே, இக்கண்மாயை சீரமைக்க ரூ.17.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நீர்வளத்துறை சார்பில் ஜன.31ல் பணிகள் துவங்கின. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாடக்குளம் கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய்கள் மீது இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்க முடிவு ெசய்யப்பட்டது. இதையடுத்து கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்பு கோயில்கள், வீடுகள் உட்பட 15 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இருப்பினும் அவற்றை உரிமையாளர்கள் அகற்றவில்லை.
இதையடுத்து இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நீர்வளத்துறையின் பெரியாறு – வைகை வடிநில வட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர்கள் ஆதிநாதன், ராதாகிருஷ்ணன், பணி ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் நேற்று துவங்கின. அப்போது அச்சம்பத்துவில் உள்ள மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களை இடிக்க முயன்றபோது, விநாயகர் கோயிலுக்கு பட்டா வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதேநேரம் மாரியம்மன் கோயில் நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாக கூறி, அதை இடிக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். பின்னர் இந்த கோயில்களை இடிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டபின் விரைவில் அகற்றும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் அப்பகுதியில் இருந்த வீடுகள் உள்ளிட்ட பிற ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.