சிவகங்கை, செப். 6: முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றோ அல்லது பங்கேற்றிருத்தல் வேண்டும். ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியான போட்டிகளாகும்.