Friday, June 2, 2023
Home » மஹாளய பட்சம் என்றால் என்ன?

மஹாளய பட்சம் என்றால் என்ன?

by kannappan
Published: Last Updated on

தெளிவு பெறுஓம்புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். அதாவது புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வருகின்ற பௌர்ணமிக்கு மறுநாள் ஆன ப்ரதமை திதி முதல் இந்த மஹாளய பட்சம் என்பது துவங்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காணவரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் சுப நிகழ்வுகளைத் தவிர்த்து முன்னோர்களின் நினைவாக அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. 15 நாட்களும் செய்ய இயலவில்லை என்றாலும், அமாவாசை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். இதற்கு மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. தானதர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலைமலையாகக் கிடைத்ததாம். ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் இதுதான் – அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் பெற்றவர்கள் யார் என்று அறிந்திராத காரணத்தால் தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களைத் தீர்க்கும் வகையில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை. தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாசை அதற்கு மறுநாள் ஆன ப்ரதமையையும் சேர்த்து மொத்தம் 16 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய பட்சத்தின் எல்லா நாட்களிலும் சிராத்தம், தர்ப்பணம் செய்வோரும் உண்டு. அவ்வாறு செய்பவர்கள் பிரதமை முதல் துவங்கி அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை வரை 16 நாட்கள் கடைபிடிப்பார்கள். அதாவது நமது இல்லத்திற்கு வந்து அமாவாசை நாள் வரை தங்கியிருந்த பித்ருக்களை அதற்கு மறுநாள் ஆன பிரதமை நாள் அன்று சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து பித்ருலோகத்திற்கு வழியனுப்பி வைப்பதாக ஐதீகம். இந்த மஹாளய பட்சத்தின் எல்லா நாட் களுமே பித்ருக்களுக்கு உகந்தவை என்றாலும் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களும் உண்டு. மஹாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, ஸன்யஸ்த மஹாளயம், கஜச்சாயை, சஸ்திரஹத மஹாளயம் என்று ஒருசில நாட்களை பஞ்சாங்கத்தில் பளிச்சென்று குறிப்பிட்டிருப்பார்கள். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதை எமதர்மராஜன். பித்ரு லோகத்திற்கு அதிபதி ஆகிய எமதர்மராஜனின் ஜென்ம நட்சத்திரம் மஹாளய பட்சத்தில் இணைகின்ற நாள் மஹாபரணி என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிராத்தம் செய்யும் போது பித்ருலோகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடைகின்றன. பரம்பரையில் எவரேனும் சந்நியாசம் போயிருந்தால் அவர்களுக்கு உரிய நாள் ஆக ஸன்யஸ்த மஹாளயம் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. இது த்வாதசி திதி அன்று வரும். அன்றைய தினம் சிராத்தம் செய்யும்போது சந்யாசிகள் த்ருப்தி அடைகிறார்கள். ஆயுதத்தால் மரணம், விபத்தினால் மரணம் அல்லது தற்கொலை முதலான துர்மரணத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சதுர்த்தசி திதி அன்று வருகின்ற சஸ்திரஹத மஹாளய நாள் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது.‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இந்த வாக்கியத்தை பலரும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது தனது தாய் அல்லது தந்தைக்கு பிரதி வருடந்தோறும் வருகின்ற சிராத்தத்தை செய்யாமல் மறந்து போனவர்கள் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டால் போதும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறு, பெற்றோர்களுக்கு வருடந்தோறும் அவர்கள் இறந்த திதி அன்று கண்டிப்பாக சிராத்தம் செய்ய வேண்டும். மஹாளய பட்ச நாட்களில் இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, தகப்பனின் மற்றொரு மனைவியான ஸபத்னீ மாதா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன் (தாயின் சகோதரர்), மாமி (தாயின் சகோதரனின் மனைவி), தகப்பனின் சகோதரியான அத்தை, அவரது கணவர், தாயின் சகோதரியான சித்தி, அவரது கணவர், தன்னுடன் பிறந்த சகோதரன், அவரது மனைவி, உடன்பிறந்த சகோதரி, அவளது கணவர், தனது மனைவி, அவளது குடும்பத்தினரான மாமனார், மாமியார், மச்சினன், தான் பெற்ற பிள்ளை, மருமகள், தான் பெற்ற பெண், மாப்பிள்ளை, ஆசிரியர், சிஷ்யன், தன்னுடைய முதலாளி ஆகிய எஜமானன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.இவர்களை காருணீக பித்ருக்கள் என்று அழைப்பார்கள். இந்த காருணீக பித்ருக்களின் வீட்டில் ஒரு நாள் அல்லது ஒரு வேளையாவது அவர்கள் கையினால் உணவு உண்டிருப்போம். ஒருவாய் தண்ணீராவது வாங்கிக் குடித்திருப்போம். இவர்களை நாம் பெரும்பாலும் மறந்துபோய்விடுகிறோம். இவர்களையும் நினைத்து சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வதையே மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு என்ற முதுமொழிக்கான உண்மையான பொருள் ஆகும். பிரதி மாதம் வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும். பிதுர்காரகன் சூரியனும், மாதுர்காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும் போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர். ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். மஹாளய பட்சத்தில் வருகின்ற இந்த 15 நாட்களில் சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வதோடு ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதால் பித்ருலோகத்தில் உள்ளோர் த்ருப்தி அடைகின்றனர். பித்ருக்கள் த்ருப்தி அடைவதால் பூரண ஆயுள், நல்ல ஆரோக்யம், தர்மசிந்தனையுள்ள சந்ததி, அள்ள அள்ளக் குறையாத செல்வம், பூரணமான மன நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்று சாஸ்திரம் அறுதியிட்டுக் கூறுகிறது. ?தந்தைக்கு திதி கொடுக்க குளம் உள்ள கோயிலில்தான் தர வேண்டுமா? சில கோயில்களில் குளமே இல்லை. அவ்வாறு இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு. சிராத்தம் அல்லது திதி என்பதை நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும். புனித தலங்களுக்குச் செல்லும்போதும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும்போதும் அங்குள்ள நீர்நிலைகளில் சிராத்தம் செய்வது என்பது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. கோயில் என்பது இறைவன் குடியிருக்கும் இடம். அங்கே சிராத்தம் செய்வது என்பது விதிகளில் இல்லை. அதே நேரத்தில் அந்த கோயில்களில் உள்ள திருக்குளங்களின் படித்துறைகளில் சிராத்தம் செய்வது ஏற்கத்தக்கதே. இவை அனைத்தும் பித்ருக்களுக்கான விசேஷ நாட்களில் செய்ய உகந்தவையே தவிர, பிரதி வருடந்தோறும் வருகின்ற பெற்றோரின் சிராத்தத்தை அதாவது திவசத்தினை செய்வதற்காக அல்ல. வருடத்திற்கு ஒருமுறையே வருகின்ற சிராத்தத்தினை நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும்.கண் திருஷ்டி போக்கும் சாம்பிராணிபிரங்கின்சென்ஸ்  என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது  மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள  சாம்பிராணியாக மாறுகிறது. சாம்பிராணி மரங்கள் இந்தியாவில் குஜராத்,  அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிஸா, தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன.தமிழ்நாட்டில்,  கல்வராயன், சேர்வராயன் மலைகளில் 500 – 700 மீட்டர் உயரத்தில் இம்மரங்கள்  உள்ளன. உறுதியான இம்மரத்தை எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும்.  தீக்குச்சித் தயாரிப்பிலும் இம்மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. நவம்பர்  – ஜூலை காலத்தில் தான் இம்மரங்களில் பால் அதிகமாக வடியும். ஒரு மரம்  ஓராண்டில் ஒரு கிலோ சாம்பிராணியைத் தரும். இந்த மரமிருக்கும் மண்ணும்  வாசமாக இருக்கும். இந்தக் சாம்பிராணிப் புகையே, அக்கால அரசர்கள்,  செல்வந்தர்களின் வீடுகளில் வாசனைப் புகையாக, நச்சுகளைப் போக்கும்  மருந்துப் புகையாக இருந்தது.பண்டைக்காலம் முதல் வழிபாட்டில்  மருத்துவத்தில் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. இது நல்ல பூச்சிக்கொல்லியாக  உள்ளது. இதனாலேயே நம் முன்னோர்கள் வீட்டிலுள்ள பூச்சிகளை விரட்ட சாம்பிராணிப் புகையைப் போடும் பழக்கத்தை ஆன்மிகம் வழியாகக் காட்டிச்  சென்றுள்ளனர்.தூபக்கால் என்னும் சாம்பிராணிப் பாத்திரத்தில், தேங்காய்  ஓடுகளை எரித்து, நெருப்பை மூட்டி, அதில் சாம்பிராணிப் பொடியைத் தூவினால்,  வீடுகளில் தெய்வீக நறுமணம் கமழும். இந்தப் புகையைப் பூஜையறையில் காட்டிய  பிறகு, வீடு முழுவதும் காட்டுவார்கள். பாறையைப் போல் இறுகிய சாம்பிராணிக்  கட்டி, தீயில் பட்டதும் புகையாக வெளியாவதைப் போல, நம்மை வருத்தும்  துன்பங்கள் எல்லாம், இறைவன் அருளால் புகையைப் போல லேசாகி விடும் என்பது  நம்பிக்கை.சாம்பிராணிப் புகையின் நன்மைகள்:பெண்களின் கருப்பை  சார்ந்த பாதிப்புகளையும் சரி செய்யும் சாம்பிராணிப் புகை, உடலில் எந்த  நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி  கறுப்பாக வளரும். சாம்பிராணிப் பிசினில் உள்ள வேதிப்பொருட்கள்,  புற்றுநோயைத் தீர்க்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதைத்தான் நம்  முன்னோர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் வீடுகளில் சாம்பிராணியைப் போடச் சொன்னார்கள். வீடுகளில் அடிக்கடி சாம்பிராணிப் புகையைக் காட்டினால் நச்சுக்கிருமிகள் அழிந்து விடும். சாம்பிராணியில் உள்ள வேதி  அமிலங்கள், நமது நலத்தைக் காக்கும். உடலில் வீக்கம், தீராத காயம் இருந்தால் சாம்பிராணி மற்றும் ஊமத்தை இலையை வெண்ணெய்யில் அரைத்துத் தடவினால்,  எரிச்சல் நீங்கிக் காயங்கள் விரைவில் சுகமாகும். சாம்பிராணி சிறந்த கிருமிநாசினி. இது உடைந்த எலும்புகளை இணைக்கும். சிறுநீரகப் பாதிப்புகளை  நீக்கும். சின்ன வெங்காயத்துடன் சாம்பிராணியை அரைத்துத் தடவினால், கட்டிகள், வீக்கங்கள் நீங்கும். சாம்பிராணியுடன் காய்ந்த வேப்பிலை,  நொச்சியிலையைச் சேர்த்துப் புகையிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.சாம்பிராணிப் பிசின்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் கிருமிநாசினிகள் தயாரிக்கும் மூலப்பொருளாக பயன்படுகின்றன.சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில்  குளித்துவிட்டு தெய்வப் படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி  தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள். குறிப்பாக கண்  திருஷ்டி கண்டிப்பாக விலகும்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi