பெரம்பூர், அக்.23: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்கும், மீட்பு பணிகளுக்காகவும் 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மீட்புக்கு குழுவும் ஒரு தலைமை காவலர் தலைமையில் 10 காவலர்கள் உள்ளனர். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம், ரப்பர் படகு, மிதவை, ஜாக்கெட்கள், கயிறு உள்ளிட்ட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த குழு, அந்தந்த பகுதிகளில் உள்ள காவலர்களுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், புளியந்தோப்பு காவல் சரக்கத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கொடுங்கையூர் எழில் நகரில் நேற்று நடந்தது. புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கொருக்குப்பேட்டை தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், மழை காலத்தில் நமது வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு வெள்ளம் வந்தால் அதிலிருந்து தப்பிப்பது, மின்சாதன பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். தொற்று நோய் வராமல் எவ்வாறு நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாப்பது, அவசர நேரத்தில் வெள்ள தடுப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பொதுமக்களுக்கு செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் பேசுகையில், ‘‘தாழ்வான இடங்களில் மின் பகிர்மான பெட்டிகள் இருந்தால் பொதுமக்கள் அதனை கவனமுடன் கையாள வேண்டும். தொற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும். காய்ச்சல் அல்லது சலி தொல்லை இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளோர்கள் குப்பைகளை மழைநீரில் தூக்கி எறிய கூடாது,’’ என்றார்.