சாயல்குடி, நவ. 4: மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசைப்பர் தேவலாயத்தில் சப்பரம் பவனி நடந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள மட்டியரேந்தல் புனித சூசைப்பர் தேவாலய ஜெபமாலை ஒப்புக்கொடுக்கும் விழா நடந்தது. விழாவிற்கு அருட்தந்தை குருஸ் ஜோக்கின் தலைமை வகித்தார். 153 ஜெபமாலை ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இரவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சூசையப்பர் உருவம் ஊர்வலம் நடந்தது.
சப்பரம் கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இதனையடுத்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருட்தந்தைகளின் சிறப்பு மறையுரை நடந்தது. இத்திருவிழாவில் தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.