சாயல்குடி, ஆக.31: கடந்தாண்டு விளைவித்த தானியங்களில் கூழ் காய்ச்சி சாமிக்கு படையலிட்டு பனை ஓலையில் பிரசாதமாக சாப்பிட்டு வழிபாடு செய்த விவசாயிகள். முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிப்பட்டி கிராமத்தில் கடந்தாண்டு வயல்களில் விளைவிக்கப்பட்ட நெல், கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு,சோளம் உள்ளிட்ட தானியங்களை வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும். பின்பு அதனை ஒரே பாத்திரங்களில் கூழ் காய்ச்சி, காளியம்மன், அய்யனார் சாமிகளுக்கு படையல் வைத்து, பொதுமக்களுக்கு பாரம்பரிய முறைப்படி பனை ஓலையில் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொசுக்குடிபட்டி கிராம மக்கள் கூறும்போது, பருவ மழையை எதிர்பார்த்து சாமிக்கு படையலிடும் வழக்கம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. அதன்படி கடந்தாண்டு விளைவிக்கப்பட்ட தானியங்களை வீடு, வீடாக சென்று சேகரிக்கப்படும். அதனை ஒரே பாத்திரங்களில் சமைத்து அந்த பாத்திரங்களை தலை சுமையாக சுமந்து, பெண்கள் கும்மியாட்டம், ஆண்கள் ஒயிலாட்டமாடி, பாரம்பரிய மேளதாளங்கள், வானவேடிக்கை ஆட்டம் பாட்டங்களுடன் கிராமத்தில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக வருவோம்.
பிறகு கிராமத்திலுள்ள காளி அம்மன் மற்றும் அய்யனார் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து அந்த பிரசாதத்தை பனை ஓலைகளில் படையலிட்டு வழிபாடு செய்வோம். தொடர்ந்து பொது மக்களுக்கு பனை ஓலையில் அன்னதானம் வழங்கப்படும். இந்த வழிபாட்டு முறைக்கு பிறகு நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினர்.