திருப்பூர், மே 21: மழை நீரை சேகரிப்பதற்காக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் வெட்டப்பட்ட குளம் மழை நீரில் நிரம்பியது. ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் மழை நீர் சேமிப்பதற்காக என்.எஸ்.எஸ் குளம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்டது.
திருப்பூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த குளத்தில் மழை நீர் நிரம்பி குளம் முழுக்க நீராக காட்சியளிக்கின்றது. இது குறித்து நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறியதாவது: நிலத்தடி நீரை உயர்த்த வீணாகிபோகும் மழை நீரை சேமிப்பதற்காக அலகு -2 மாணவர்களை கொண்டு கல்லூரி வளாகத்தில் குளம் வெட்டப்பட்டது. அதில் மழை நீரை சேகரித்து வருகிறோம்.
அதன்படி நேற்று இரவு பெய்த மழையால் குளம் நிரம்பி காணப்படுகிறது, இயற்கை நமக்கு கொடுத்த வரம் மழை நீர் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் பரவலாக எதிர்பாரத அளவு வெப்ப அலை அடித்தது, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆனால் மழை பெய்வதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்லூரியில் உள்ள மரங்களும் இனி செழிப்பாக காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அனைவரும் குளத்தில் நீர் நிரம்பி உள்ளதை திரளாக பார்த்து மகிழ்ந்தனர்.