சிவகங்கை, செப்.15: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா, எலி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களான டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒட்டுமொத்த துப்புரவுப் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி, தினசரி குளோரினேஷன் செய்து குடிநீர் வழங்கும் பணி, குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுது உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டில் நல்ல தண்ணீர் மற்றும் மழைநீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்களை மூடி வைக்கவும். தொட்டி டிரம்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் மூலம், பிரஸ் அல்லது தேங்காய் நார் கொண்டு தேய்த்து கழுவி காயவைத்து பிறகு உபயோகிக்க வேண்டும். வீட்டைச்சுற்றிலும் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக், உபயோகப்படுத்தப்படாத டயர், தேங்காய் மட்டை, சிரட்டை, உடைந்த மண்பாண்டங்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோக படுத்தாத ஆட்டு உரல்களை கவிழ்த்து வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுப்பொருட்களை எலிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறமுள்ள டிரேயை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் கண்டவுடன் பொது மக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.