ஓமலூர், மே 24: ஓமலூரில் பெய்து வரும் தொடர் மழையால், சக்கரசெட்டிப்பட்டியில் மண்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மேலும், ஒமலூர்- தாரமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். ஓமலூர் அடுத்த சக்கரசெட்டிப்பட்டி ஊராட்சி நாலுகால் பாலம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு பிரதான தார்சாலையில் இருந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வரை, சுமார் 500 அடி தூரம் பாதை தனியாருக்கு சொந்தமானது. சாலை அமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பல ஆண்டுகலாக மண்சாலையே பயன்பாட்டில் உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால், மண்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. சாலையில் நடந்து மற்றும் டூவீலரில் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட செல்லும் தாய்மார்கள் என அனைவரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அதே போல், ஓமலூர் இருந்து தாரமங்கலம், சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மழைநீர் செல்ல முடியாததால், சாலையில் பாதி தூரம் வரை மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.