Friday, September 13, 2024
Home » மழைநீரை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; வேளாண்துறை அட்வைஸ்

மழைநீரை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; வேளாண்துறை அட்வைஸ்

by MuthuKumar

ஆண்டிபட்டி, ஜூன் 8: மழைநீரை பயன்படுத்தும் வழிமுறை குறித்து வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர்பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமில்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர்தேவை அறிந்து நீர்ப்பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பை குறைக்கலாம். மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை செய்து நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலில் இருந்து பயிரைக் காக்கலாம்.

நிலச்சரிவிற்கு குறுக்கே ஆழச்சால் அகலப்பாத்தி முறையினை கடைபிடித்து சாகுபடி மேற்கொள்ளலாம். கோடை மழை கிடைக்கும்போது சரிவிற்கு குறுக்கே மழைநீரை வழிந்தோடச் செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம். மேலும், நீர்ப்பாய்ச்சும்போது கூட மண் ஈரம், நீண்ட நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்றதாக இருக்கும். அதே போல் இருக்கும் குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்களைக் காத்திடவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களைக் காத்திடவும் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைக் கடைபிடிக்கும்போது வறட்சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும்.

ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர்ப்பாய்ச்சும்போது ஒரு வரப்புவிட்டு மறு வரப்பிற்கு நீர்ப்பாய்ச்சும் முறையில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். வரப்பு பயிராக ஆமணக்கு பயிரடலாம். கோடையில் சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இலைவழித்தெளிப்பு உரம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தில் நீரில் கரையும் உரப் பயன்பாடு கடைபிடித்தலால் நல்ல பயன் தரும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாலை நேரத்தில் கடைபிடிப்பது நல்லது.

காலையில் வெயில் தாழும் வரையிலும், மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்திலும் விவசாயப் பணிகளாகிய களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் விவசாயிகள் உடல் ஆரோக்கியம் காக்கவும், நேரடி சூரிய கதிர்வீச்சுத் தாக்குதலைத் தவிர்க்கவும் செய்யலாம். கடும் வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமலும், மர நிழல் உள்ள பகுதிகளில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் ஏற்பாடுகள் செய்யலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

sixteen + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi