Wednesday, September 18, 2024
Home » மழலையரை முடக்கும் மூளைக்காய்ச்சல்

மழலையரை முடக்கும் மூளைக்காய்ச்சல்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் இளம் தாய்மார்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் வகையில் மூளைக்காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது உட்பட பல விஷயங்கள் குறித்து விவரிக்கிறார் குழந்தை நல மருத்துவர் லஷ்மிபிரசாந்த்.‘‘2014-ம் ஆண்டுக்குப் பிறகு, பீகார் போன்ற வட மாநிலங்களில் உயிர்க்கொல்லி நோயான மூளைக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது மீண்டும் நடைபெற்று இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் இந்நோய் பற்றி அறிந்துகொள்வது அவசியம். நமது மூளையில் ஏற்படுகிற வீக்கம்தான்(Inflammation) மூளைக்காய்ச்சல் என்றழைக்கப்படுகிறது. இதனை, மருத்துவ உலகில் Accute encephalitis Syndrome என குறிப்பிடுவோம். மருத்துவத்துறை சார்ந்து, இந்நோய் ஒரே மாதிரியாக காணப்படும். அதேவேளையில் ஒரு குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.அவை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை(Fungus), ஒட்டுண்ணி(Parasite), ரசாயனங்கள் மற்றும் நச்சுப்பொருட்கள் போன்றவையாக இருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்று மூளைக்காய்ச்சலுக்குக் காரணமாக இருந்தாலும், மருத்துவ வெளிப்பாடு(Clinical Manifestation) பொதுவானதாக காணப்படும். அவை காய்ச்சல், தலைவலி, மனக்குழப்பம், ஜன்னி மற்றும் கோமா போன்றவை ஆகும். மூளைக்காய்ச்சலுக்கான காரணம் எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற குழந்தைகளைப்போல் நார்மலாக இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் என்றால் எந்த நேரமும் சிடுசிடுவென்று அதிக கோபத்துடன் இருப்பார்கள். கட்டுப்படுத்த முடியாத அழுகை, குறைந்த அளவு பால் உட்கொள்ளுதல் மற்றும் சாப்பிடுதல், சுறுசுறுப்பற்று காணப்படல், தலையின் உச்சிப்பகுதி ஒட்டி இருத்தல் போன்றவை; அறிகுறிகளாக இருக்கலாம்.மூளைக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளை எமர்ஜென்ஸி கேஸாகத்தான் மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஏனென்றால், உடலில் மிகவும் ஆபத்தான விளைவுகளை மூளைக்காய்ச்சல் ஏற்படுத்தும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படுதல் என்பது மிகவும் ஆபத்தான நிலை ஆகும். அவர்களைக் குணப்படுத்துதல் என்பதும் கடினமான செயல். நமது நாட்டில், மூளைக்காய்ச்சல் என்பது சீரியஸான சுகாதாரப் பிரச்னையாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே சொன்னபடி இந்த நோயால், 15 வயதுக்கும் கீழே உள்ள குழந்தைகளுக்குக் காய்ச்சல், சித்தபிரமை முதலான மனநிலை மாற்றம் வரக்கூடும். இளம்வயது குழந்தைகளை இந்நோய் அதிகளவில் பாதிக்கும். இந்த நோய் உருவாவதற்கும், பரவுவதற்கும், ஃபங்கஸ், நச்சுப்பொருட்கள், ரசாயனங்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வைரஸ்தான் முதன்மை காரணியாக உள்ளது. இதனால், மூளையின் திசுக்களில் வீக்கம் ஏற்படும். மூளைக்காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ், உடலில் தோன்றிய பின்னர் மூளையின் திசுக்களுக்குப் பரவும். அங்கு, இதனுடைய எண்ணிக்கை பல மடங்காக பெருகும். நமது நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் இந்த வைரஸ் இருப்பதை, மூளையின் திசுக்களில் உண்டாகுகின்ற வீக்கத்தின் மூலமாக தெரியப்படுத்தும். மூளையில் ஏற்படுகின்ற இந்த வீக்கம், முதுகு தண்டுவடத்திலும் ஏற்படக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. அதன் காரணமாக, மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்த நேரத்திற்கு ஏற்ற சிகிச்சை அத்தியாவசியத் தேவையாகிறது. அத்தகைய சிகிச்சை உடனடியாக தரப்படுவதன் மூலமாகவே, அவர்களைக் குணப்படுத்த முடியும். வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை வீக்கம் தவிர, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும் கணிசமாக குறையும். எனவே, ஜூஸ் போன்ற நீர்சத்துக்களை உடனடியாக கொடுத்து, உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வேண்டும். இதனோடு நோயைக் கட்டுப்படுத்துதல், தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்தல், கை, கால் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துதல் போன்ற சிகிச்சைகளும் தேவைப்படும். ஒரு சில நோயாளிகளுக்கு, ஐ.சி.யு சிகிச்சையும், சுவாசிப்பதற்கான உதவியும் தேவைப்படும். வைரஸ் காரணமாக, இந்நோய் வருவதால் Anti-Viral Drug-ம் தேவைப்படும். இந்த நோய்க்கு வைரஸ், நச்சுப்பொருட்கள், கெமிக்கல்ஸ், லிச்சி பழத்தை வேக வைக்காமல் சாப்பிடுதல் போன்றவை காரணமா என்பது குறித்து, பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், ஒரு குழந்தை நல மருத்துவராக நான் சொல்வது, எந்தெந்த குழந்தைகள் எல்லாம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனரோ, அவர்களுக்கு மூளைகாய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சொல்வேன். ஒவ்வொரு நோயும் குறிப்பிட்ட காலத்தில் வந்து பின்னர் மறைந்துவிடும். அந்த அடிப்படையில் இந்த நோய் கோடைக்காலத்தில் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். கொசுவால் பரவுகிற மூளைக்காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகளவில் குழந்தைகளைப் பாதிக்கும். எனவே, கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல், சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்குத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுதல் மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும். ஏனெனில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சின்னம்மை, தட்டம்மை போன்றவற்றிற்குக் காரணமான வைரஸால் மூளைக்காய்ச்சல் வரலாம். நன்றாகப் பழுத்த பழங்களைச் சுத்தப்படுத்தி குழந்தைகளுக்குத் தருவது பாதுகாப்பானது. ஏனெனில், பீகார் போன்ற வட மாநிலங்களில் பழுக்காத லிச்சியை வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் குழந்தைகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்த காரணத்தால், அக்குழந்தைகளுக்கு குளுக்கோஸ் அளவு குறைந்து அவதிப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனவே குழந்தைகளுக்குப் பழங்களைச் சுத்தமாக கழுவி கொடுப்பது பாதுகாப்பானது. Japanese Encephalitis-க்கு 9,16 மற்றும் 24-வது மாதங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. மூளைக்காய்ச்சலின் ஆரம்பநிலையில் கொடுக்கப்படும் சிகிச்சைகள் அபாய கட்டத்தைக் கடந்து எதிர்பார்த்த பலனைத் தரும். இந்நோயால் பாதித்த குழந்தைகளுக்கு உரிய நேரத்தில், தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்புகூட நேரிடலாம். ஒருவேளை சிகிச்சைக்குப்பின் அவர்கள் பிழைத்திருந்தால் நினைவாற்றல் குறைதல், குரல் வளம் கெடுதல், பார்வை குறைதல், கை, கால்கள் செயல் இழத்தல் ஆகிய பாதிப்புகள் வரலாம். கருவுற்றிருக்கும் பெண்களும், இளம் தாய்மார்களும், தனிநபர் சுகாதாரத்தைப் பேணுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்,; தடுப்பூசிகளை முறையாகப் போட்டு வருதல், சுகாதாரமான கழிப்பறை வசதி, நோய்களைப் பரப்பும் கொசு, ஈ ஆகியவை உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தலாம்’’. என் கிறார்.– விஜயகுமார்

You may also like

Leave a Comment

ten + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi