பேராவூரணி, மே 30: மீன் பிடி தடைக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் விசைப்படகுகளின் தரம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மீனவர்களின் வாழ்வாதாரம் எப்போதுமே தள்ளாட்டம் தான். ஆனாலும், சவாலான அந்த வேலையை அனாயசமாக மீனவர்கள் மேற்கொண்டு தான் வருகிறார்கள். அப்படிப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு அவர்கள் பயன்படுத்தும் படகுகளின் தரம், பாதுகாப்பு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலுக்கு முன்பு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஆனால், 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலால் பெரும்பாலான படகுகள் சேதமடைந்தன. சேதமடைந்த படகுகளை பழுதுபார்க்க தேவையான நிதி ஆதாரம் இல்லாமல் மீன்பிடி தொழிலை விட்டே பலர் சென்று விட்டனர். அதோடு, கடலுக்குள் எல்லை பிரச்னையால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் புதிதாக விசைப்படகு வாங்கி மீனவர்களிடையே ஆர்வம் குறைந்து விட்டது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 133 விசைப்படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்15 முதல் ஜூன்14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. தடைக்காலத்தை முன்னிட்டு விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்க்கும் பணிகள், வர்ணம் பூசுதல், வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை விசைப்படகு உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.
தடைக்காலம் முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகுளின் தரம், பாதுகாப்பு, மற்றும் பதிவு ஆவணங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமையில் போர்மேன் ராஜவள்ளி, ஆய்வாளர்கள் துரைராஜ், குமார், உதவி ஆய்வாளர் சங்கர், மீன்வள மேற்பார்வையாளர்கள் சார்லஸ், விஜயபாலன், லெட்சுமிகாந்தன், யோகேஷ் மற்றும் சாகர்மித்ரா பணியாளர்கள் விசைப்படகுகளின் உறுதித்தன்மை, தரம் மற்றும் கடலில் சென்று மீன்பிடிக்க தகுதியானதா உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ததோடு மீன்பிடி உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா எனவும் அனைத்து படகுகளுக்கும் முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். அவ்வாறு மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து விசைப்படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆய்வின்போது மீனவர் நல வாரிய உபதலைவர் தாஜுதீன், விசைப்படகு சங்க மாவட்ட செயலாளர் வடுகநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.