சேலம், மே 20: ஏற்காடு மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க 30 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் டிரைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 26 கிலோமீட்டர் தொலையில் ஏற்காடு உள்ளது. அடிவாரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் ெதாலைவு மலைப்பாதைகளாகும். இந்த மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவு உள்ளது. ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலத்தை கண்டுகளிக்க தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டு கோடை விழா வரும் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஏழு நாட்கள் நடக்கிறது. கடந்த சில நாட்களாக கோடையையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக ஏற்காட்டில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்காற்று வீசுகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய வாகனத்ைத நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மலைப்பாதையில் இயக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: ஏற்காடு மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் தனியார் பஸ் 13வது ெகாண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து 11வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செங்குந்தாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து ஏற்காடு மலைப்பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயங்குகிறதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். ஏற்காடு மலைப்பாதையை பொருத்தமட்டில் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் இயக்க வேண்டும்.
தற்போது ஏற்காடு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மலைப்பாதையில் விபத்தை தவிர்க்கும் வகையில் நிர்ணயிக்கபட்ட 30 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை டிரைவர்கள் இயக்க வேண்டும். குறிப்பாக கீழே இருந்து மேலே வரும் வாகனங்களுக்கு, கீழே இறங்கும் வாகனங்கள் வழிவிட வேண்டும். பொதுவாக மலைப்பாதையில் வாகனங்கள் இறங்கும்போது 2வது கியரில் தான் இறங்க வேண்டும். அவ்வாறு வாகனத்தை இயக்கும்போது அதிவேகத்தில் டிரைவரின் கட்டுபாட்ைட இழந்து சாலை விட்டு சென்றுவிடும். மேலும் மலைப்பாதையில் ஓவர்டேக் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.