பேரணாம்பட்டு, ஆக.3: பேரணாம்பட்டு அருகே அதிகாலை மலைப்பாதையில் இருந்து 30 அடி ஆழ பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் படுகாயத்துடன் தப்பினார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா செல்லும் சாலையில் உள்ளது பத்தலப்பல்லி மலைப்பகுதி. இந்த மலைப்பகுதி 7 வளைவுகள் கொண்டுள்ளது. இவ்வழியாக இரவு பகல் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. மேலும், சென்னை, வேலூரில் இருந்து இவ்வழியாக ஆந்திர மாநிலம் வி.கோட்டா, கர்நாடக மாநிலம் ேகஜிஎப், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெங்களூரு மாநிலம், சிக்மலாபூர் பகுதியை சேர்ந்த டிரைவர் பாபுஜி(38) என்பவர் வேலூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து சரக்குகள் ஏற்றிச்செல்ல காலி கன்டெய்னர் லாரியை பெங்களூருவில் இருந்து ஓட்டி வந்தார். தொடர்ந்து, பத்தலப்பல்லி மலைப்பகுதியில் உள்ள முதல் வளைவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி அங்குள்ள தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு சுமார் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் உஷாரான டிரைவர் பாபுஜி, லாரியில் இருந்து லாவகமாக குதித்துள்ளார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், பாபுஜியை மீட்டு வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.