தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பேரணியை கலெக்டர் சதீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், மலேரியா நோய் எதிர்ப்புக்கான விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், மாணவ, மாணவிகள் மலேரியா ஒழிப்பு மாத உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி, நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, டீன் (பொ) சிவக்குமார், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.