அரியலூர், ஆக.12: மலத்தான்குளம் கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மலத்தான்குளம் ஊராட்சியில் மலத்தான்குளம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. அதில் அதிகளவு ரேஷன் பொருட்கள் வைக்க வசதி இல்லாமல் இருந்தது. அந்த நியாய விலை கடைக்கு பெரியதாக சொந்த கட்டிடம் கட்டி தரும்படி மலத்தான்குளம் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கி புதியதாக கட்டிடம் கட்ட அனுமதி அளித்தார். அதன்படி புதிய நியாய விலை கடை மலத்தான்குளம் கிராமத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதனால் அதிக ரேஷன் பொருட்கள் இந்த கட்டிடத்தில் இருப்பு வைக்க முடியும்.ஆகையால் கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டு செயல் பாட்டுக்கு வர உள்ளது.