திருத்துறைப்பூண்டி,செப். 4: மறைந்த 2 காவலர் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சம் நிதியை திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் வழங்கினார்.திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு 1993-ம் ஆண்டு பேஜ் காக்கும் கரங்கள் குழு சார்பில் மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வர்த்தகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார், திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 14ம் தேதி இறந்தார்.
இதேபோல, திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் கடந்த மே 17ம் தேதி இறந்தார்.
1993ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த காவலர் குடும்பத்தை சேர்ந்த ரமேஷ்குமார் , நம்பிராஜன் ஆகியோரின் குடும்பதாரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா ரூ.7,04,500 வீதம் 2 பேருக்கும் மொத்தம் ரூ.14,09,000 (ரூபாய் பதிநான்கு லட்சத்து ஒன்பது ஆயிரம் மட்டும்) வசூல் செய்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழங்கினார்.இதில் திருத்துறைப்பூண்டி போலீஸ் டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.