கோவை, மே 25: நலிவடைந்த மற்றும் மறைந்த இந்திய பாரம்பரிய கலைகளை 100க்கும் மேற்பட்டோர் 60 நிமிடத்தில் வரைந்து அசத்தினர்.
கோவை போத்தனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய ஓவியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஓவிய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 60 நிமிடத்தில் ஓவியம் வரைந்து சாதனை படைத்தனர். மேலும், அவர்கள் வரைந்த ஓவியங்கள் உலக சாதனை மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து ஓவிய ஆசிரியர் அண்ணி கூறுகையில்,“தற்போது பாரம்பரிய ஓவியங்கள் நலிவடைந்து வருவதாலும், பொதுமக்களுக்கு ஓவியம் மற்றும் நமது பாரம்பரியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த போட்டியானது நடத்தப்பட்டது.குறிப்பாக, தமிழகத்தில் மதுரை குகை ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நீலகிரி பகுதியில் குறும்பா ஓவியங்கள் என ஆயிரக்கணக்கான ஓவியங்கள் மறைந்த நிலையில் உள்ளது. அதனை அனைவரும் வரைந்தனர்.
அதேபோல, தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள் மறைந்து உள்ளது. அந்த ஓவியங்களை வரைந்து பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த ஓவிய போட்டி நடைபெற்றது.